Something is missing

இன்னும் ஒரு குறைவுண்டு:

பிரியமானவர்களே கிறிஸ்துவின் சபை இன்று திசைமாறிப் போய்விட்டது. ஏனெனில், ஆடல் பாடல் இங்கே கொஞ்சமில்லை. ஆராதனைக்கும் இங்கே பஞ்சமில்லை. பிரசங்கங்களும் நன்றாய்த்தான் இருக்கின்றன. ஆனாலும் சபையில் ஏதோ இன்னும் குறைவுபடுகிறதே அது என்ன? ஜனங்களின் வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் காணப்படவில்லையே அது ஏன்? அதைத்தான் நாம் இச்செய்தியில் காணப்போகிறோம்.

எபிரெயர் 3:7-13 சற்றே நிதானமாய் நாம் வாசிக்கக்கடவோம்.

7. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,

8. வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

9. அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.

10. ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;

11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

12. சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

13. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

இங்கே நாம் காண்கிற

1.அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயமும்,

2.பாவத்தின் வஞ்சனையினாலே வரும் கடினமும் எதினாலே உண்டாகின்றன?

ஆவியானவரின் சத்தத்திற்குக் கீழ்படியாதினாலேயே! என்ன? ஆவியானவரின் சத்தம் எல்லாருக்கும் கேட்குமா? ஆம்! இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியுமே ஆவியானவருடைய சத்தத்தை இயல்பாகக் கேட்கமுடியும். இந்தச் சத்தம் ஒருவன் இரட்சிக்கப்பட்ட நாள்முதல் அவனது உள்மனதில் மென்மையாய் ஒலிக்கத் துவங்கும் தேவசத்தமும் வழிகாட்டுதலுமாம்.

நித்தம் உந்தன் சத்தம் கேட்டும் பித்தன் போல வாழுகிறேன்

பக்தன்

7ஆம் வசனம் கூறுகிறபடி, இன்று அவருடைய சத்தம் எப்படி நமக்குக் கேட்கும்? எபிரெய நிருபத்தைப் பெற்றவர்களுக்கு இந்த எழுத்தாளர்மூலம் தேவசத்தம் கேட்டது(அதாவது தாம் கூறும் ஆலோசனைகளால் தேவன் அவர்களுடன் இடைபடுவதாகக் கூறுகிறார்). நமக்கு அந்தச் சத்தம் எப்படிக் கேட்கும்? வேத தியானத்தின் மூலம், போதகர்களின் ஆலோசனையின்மூலம், நண்பர்களின் எதிர்பாரா உரையாடல், ஞாயிறு ஆராதனை, பின்வரும் செய்தி, வாகனங்களில் காண்கின்ற வசனங்கள் எனப் பல விதங்களில் தேவன் நம்முடன் தொடர்புகொள்கிறார். இச்சமயத்தில், தேவன் ஏதோ சொல்லவருகிறாரே! மீண்டும் மீண்டுமிதைக் கேட்கிறோமே! என்று நாமே ஆச்சரியப்படுவோம். அந்த வார்த்தை மறுபடியும் உரைக்கப்படும்போது கண்ணிர் விட்டு, தேவ பிரசன்னத்தில் தேம்பி அழுவோம்.

இதைத்தான் 4ஆம் அதிகாரம் 12ஆம் வசனம் இவ்வாறாகக் கூறுகிறது:

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

இது எழுதப்பட்ட வேதமல்ல, சிலரது நம்பிக்கையின்படி தலைமாட்டில் வைத்துத் தூங்க. ஆனால், அவ்வேதத்திலிருந்து இன்றைக்குத் தேவன் உங்களுக்கு உரைக்கும் வார்த்தை(ரேமா). இதுதான் உங்கள் போரினை நீங்கள் வெல்ல உதவும் கருக்குள்ள பட்டயமாகும். இந்தச் சத்தத்தை அசட்டை செய்த சந்ததி 40 வருடம் அலைந்து திரிந்து இளைப்பாறுதலை இழந்தது. என்றாலும் தேவ ஜன்ங்களுக்கு இன்னும் ஒரு இளைப்பாறுதல் உண்டு. ஆகவேதான்,

“இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார்.” எபிரெயர் 4:9,10. இந்தச் சத்தைக் கேட்பவர்கள்தான் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க கடைசி எக்காளத்தின் சத்தத்தைக் கேட்க முடியும். இவர்கள்தான் தேவ வெளிப்பாடுகளைப் பெறும் கிறிஸ்தவ முதிர்ச்சியை அடைய முடியும். பூமியிலேயே கிறிஸ்து இயேசுவை முகமுகமாய்த் தரிசிக்க முடியும்.

இதை உதாசினப்படுத்தி மெத்தனமாய் வாழ்ந்த எபேசு சபையைப் பார்த்துத்தான்

அ.)“நீ ஆதி அன்பை இழந்தாய்” என்று ஆவியானவர் கூறுகிறார்.

ஆ.) “சர்தை, உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவன்போல் மாறிப்போனது.”

இ.) “லவோதிக்கேயா வெதுவெதுப்பாய் வாந்திபண்ணப்படக் காத்துக்கொண்டிருந்தது.”

எனினும் இரண்டாம் வாய்ப்பு வாசலைத் தட்டியது. “இதோ , நான் வாசற்படியில் நின்று தட்டுகிறேன்” என்று கிறிஸ்து இயேசு கூறுகின்றார்.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பு நண்பரே, உங்கள் காதுகளில் இன்று அவருடைய சத்தம் கேட்டும் உங்கள் இருந்தயங்களைக் கடினப்படுத்தும் காரியங்கள் எவை எவை?

1.வலைதளமா?

2.பொழுதுபோக்கா?

3.பெருந்திண்டியா?

4.உலகக் கவலைகளா?

5.பிரசன்னத்தையே நாடாத பரவசக் கிறிஸ்தவமா(ஊழியம்,ஊழியம்,ஊழியம்…ஆடல் பாடல் ஆராதனை, பாரம்பரியமான(சடங்காச்சாரமாம்) சபை நிகழ்ச்சிகள்)?

சற்றே சிந்திப்பீர். ஒருவேளை இந்தக் குறுஞ்செய்தியின்மூலம் தேவ சத்தம் உங்களுக்குக் கேட்பின், இதுவரைக்கும் அவரைக் கோபமூட்டினதுபோலும் ஏற்கனவே செய்ததுபோலவும் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். வைராக்கிய வாஞ்சையாய் இருக்கிற ஆவியானவர்தாமே விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குவாராக. ஆமென்!

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.