இந்த தியானப் பகுதியில், தாயின் வயிற்றிலிருந்து முதற்பிறந்தவனும் ஆதாமின் சேஷ்ட புத்திரனுமாகிய காயீனைக் குறித்து சற்றே நாம் ஆராய்வோம்.
ஆதியாகமம் 4:1
கர்த்தரால் உண்டானவன்.
ஆதியாகமம் 4:6,7
கர்த்தரின் சத்தம் கேட்டவன்.
ஆதியாகமம் 4:8-16
கர்த்தரின் பிரசன்னத்தில் வாழ்ந்தவன்.
ஆனாலும், கடைசி காலத்தைப் பற்றிக் கூறும்போது யூதாவும் யோவானும், “இவர்களுக்கு ஐயோ, இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து… … கெட்டுப்போனார்கள்” என்றும் (யூதா 12), “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்” (1 யோவான் 3:12) என்றும் சொல்லத்தக்க தவறான முன் உதாரணமாக மாறினான்.
காரணம் என்னவெனில் அவன் கர்த்தரைக் குறித்த உணர்வற்றவனாய்க் காணப்பட்டான். இங்கு நாம் 3ஆம் குறிப்பை சற்று நிதானித்து ஆராயவேண்டும்.
தேவனாகிய கர்த்தர் முதன்முதலில் பகலில் குளிர்ச்சியான வேளையிலே ஏதேன் தோட்டத்தில் உலாவினார். ஆனால் மனிதன், பாவம் செய்த பின்னர் அங்கிருந்து துரத்திவிடப்பட்டான். மகிமையை இழந்து தேவ பிரசன்னத்தை அனுபவிக்கமுடியாத பரிதாப நிலைக்குக் கடந்துவந்தான். அதன் பின்னர் தேவன் மனிதனை அந்தத் தோட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேயில்லை.
ஆனாலும் ஒன்று செய்தார். “ஜீவ விருட்சத்தைக் காவல் செய்ய கேரூபீன்கள் உண்டு. நான் மனுக்குலத்தோடு உறவாடவேண்டும்” என்று சொல்லி அந்தத் தோட்டத்தை விட்டு வெளியே கடந்து வந்தார்.
அப்படியே வேதம் கூறுகிறது: “காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு”… இதன் அர்த்தம், “காயீன் ஏதேன் தோட்டத்திலிருந்து புறப்பட்டு” என்பதல்ல! ஏனெனில் இவனும் இவன் குடும்பமும் வசித்துக்கொண்டிருந்த இடம் கர்த்தருடைய சந்நிதியாய் மாறியிருந்தது. கர்த்தர் தம்முடைய பிரசன்னத்தோடுகூட அவர்களுடன் உறவாடிக்கொண்டிருந்தார்.
ஆதியாகமம் 4:8: “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.”
இதற்குப் பின்பு அவனைக்கொன்றதை எப்படியோ மறைத்துவிடுகிறான். உடனடியாகவே தேவன் அவனைக் கூப்பிட்டு அவன் தவறைக் கடிந்துரைத்து தண்டனையையும் அறிவிக்கிறார். அதற்குப் பின்பு தேவனால் துரத்திவிடப்படுகிறான்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டுப் போகிறான் (4:16).
அதாவது, தாங்கள் வாழ்ந்துவந்த பகுதியாகிய அந்தத் தேசத்தைவிட்டுக் கடந்து சென்று (கர்த்தருடைய சந்நிதியாய் மாறியிருந்த இடத்தைவிட்டு கடந்து சென்று), தன் சொந்த வாழ்க்கையைப் பார்க்கத் துவங்குகிறான். அவனுடைய சந்ததி பின்பு நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாண்டுபோகிறது. ஒருவனாகிலும் தப்பிபோகவில்லை. ஆபேலின் இரத்தப்பழி காயீனுடைய சந்ததியாரிடத்திலே கேட்கப்பட்டது. அதற்குப் பின்பு வேதத்தில் 3 இடங்களைத் தவிர (அதுவும் ஒரு தவறான எடுத்துக்காட்டாய் மட்டுமே) அவனை வேறு எங்கும் நாம் காணமுடிவதில்லை. அவன் மறக்கப்பட்டுபோனான்!
“இப்படியிருக்க தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” 1 கொரிந்தியவர் 10:13.